Friday, February 10, 2017

தலைமுறை மோதலில் தவிக்கும் இன்போசிஸ், என்ன நடக்கிறது?

Advt.
அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை நிர்வகிக்கும் முழு அனுமதி பிள்ளைகளுக்கு எளிதில் கிடைக்காது.


அது போல் தான் கஷ்டப்பட்டு கட்டமைக்கப்பட்ட நிறுவனம் வேறு பாதைக்கு திரும்பும் போது நிறுவனர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை.முன்பை விட வேகமாக வளரும் பொருளாதாரத்தில் ஒவ்வொரு நிறுவனமும் ஜிடிபிஐயை  விட அதிகமான வளர்ச்சியைக் காட்டுவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

மிகப் பெரிய அளவில் வளர்ந்த நிறுவனம் கடந்த காலத்தில் கொடுத்த அதே வளர்ச்சியைத் திருப்பிக் கொடுப்பது சாத்தியமில்லாதது என்ற சூழ்நிலையில் ஆர்கானிக் வளர்ச்சியை விட்டு குறுக்கு வழியை நாடுகிறார்கள்.

அது தான் தங்களிடம் இருக்கும் உபரி பணத்தை வைத்து சிறு நிறுவனங்களை வாங்கி தமது வளர்ச்சியைக் கூட்டிக் கொள்கிறார்கள். அல்லது லாபமில்லாத பிரிவுகளை மூடி விடுகிறார்கள்.

ஏற்கனவே டாட்டா நிறுவனத்திற்கும் இது தான் நடந்தது. இளைய தலைமுறையாக மிஸ்ட்ரி லாபம் மட்டும் குறிக்கோளாக கொண்டு டாடாவின் சில பிரிவுகளை மூட முனைந்தார். ஆனால் எல்லா துறைகளும் தங்கள் பங்கு இருக்க வேண்டும் என்ற டாடாவின் நீண்ட கால நோக்கம் இங்கு அடிபட்டதால் அவருக்கும் ரத்தன் டாடாவிற்கும் மோதல் ஏற்பட்டு பெரிய அளவில் மாற்றங்கள் டாடாவில் நடந்தது.

டாடாவைத் தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்திலும் அந்த மோதல்கள் தொடர்கிறது.

நாராயண மூர்த்தியால் தான் தற்போதைய சிஇஓ விஷால் சிக்கா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு என்பது எளிதல்ல. 2020ம் வருடத்திற்குள் 20 பில்லியன் டாலர் வருமானம் கொண்ட நிறுவனமாக இன்போஸிஸை மாற்ற வேண்டும் என்பது தான் அது.

ஆனால் தற்போது வரை இன்போசிஸ் வருடத்திற்கு 10 பில்லியன் டாலரை தான் வருமானமாக எட்டி வருகிறது.  அவரது இலக்கை அடைய வேண்டும் என்றால் வருடத்திற்கு 30% என்றாவது வளர்ச்சியை எட்ட வேண்டும்.

ஆனால் நாஸ்காம் கணிப்பு படி ஐடி துறை எட்டு சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கே படாத பாடு பட வேண்டி வரும் என்று சொல்லியுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் தான் மேற்கத்திய நிறுவனமான SAPல் இருந்து வந்த விஷால் சிக்கா சிறு நிறுவனங்களை வாங்குதல், மற்ற நிறுவனங்களிடம் இருந்து அதிக சமபள ஆசையைக் காட்டி ஆட்களை பிடித்தல் என்ற வேலையை ஆரம்பித்தார்.

இது ஏற்கனவே உள்ளே இருந்த தலைகளுக்கு பிடிக்காமல் வெளியேற ஆரம்பிக்க சிக்கல் ஆரம்பித்தது.

அதோடு தன்னுடைய சமபளத்தையும் போர்டு உதவியோடு 55% கூட்டி 49 கோடியாக அதிகரித்துக் கொண்டார்.

ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை விதி என்பது அதிக பட்ச சம்பளம் என்பது பணியாளர்களின் சராசரி சம்பளத்தை விட 55 முதல் 60 மடங்காக இருக்கலாம் என்பதே. ஆனால்  விஷால் சிக்காவின் சம்பளம் அதனை விட பல மடங்கு அதிகமாக செல்கிறது.

இதை தவிர்த்து சிஎப்ஓ ராஜீவ் பன்சால் போன்ற உயர் பொறுப்பில் இருக்கும் சில அதிகாரிகள் பணி விலகிய போது முப்பது மாத சம்பளம் பணிக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது இன்போசிஸ் நிறுவனம் வழக்கமாக கொடுக்கும் மூன்று மாதம் சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகம்.

இதற்கெல்லாம் சரியான பதில்கள் தரப்படாததால் நாராயண மூர்த்தியின் விருப்பமான வெளிப்படை தன்மை கொண்ட நிர்வாகம் நிறுவனத்தில் மறையத் தொடங்குகிறது.

அடுத்து மத்திய மந்திரியாக இருக்கும் ஜெயந்த் சின்ஹா இன்போசிஸ் போர்டு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இது வரை அரசியல் சார்பற்று சென்ற நிறுவனத்தில் அரசியல் நுழைவதையும் நிறுவனர்கள் ஏற்கவில்லை.

இதெல்லாம் நீர் பூத்த நெருப்பாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் இருந்து தான் வந்தது.

ஆனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து இந்திய ஐடி நிறுவனங்களை காலி செய்ய முனைந்த போது தான் 12% இன்போசிஸ் பங்குகளை வைத்துள்ள நிறுவனர்கள் வெல வெலத்து போனார்கள்.

அதே நேரத்தில் இன்போசிஸ் நிறுவனம் 35,000 கோடி ரூபாயை கையில் பணமாக வைத்துள்ளது. அதனை BuyBack முறையில் பங்குகளை வாங்கினால் பங்குகளது மதிப்பு செயற்கையாக கூடும். அப்படியாவது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து உள்ளார்கள்.

ஆனால் 20 பில்லியன் இலக்கிற்கு சிறு நிறுவனங்களை வாங்கினால் தான் விஷால் சிக்கா 15 பில்லியன் வளர்ச்சியாவது பெற முடியும். அவ்வாறு நிறுவனங்களை வாங்குவதற்கு பணம் தேவை. அதனால் விஷால் சிக்காவிற்கு பணத்தை வீட்டுக் கொடுக்கவும் மனம் இல்லை.

இறுதியில் இடியாப்ப சிக்கல் இங்கு தோன்றி பழைய விடயங்களை கிளற வைத்துள்ளது.

அடைய முடியாத இலக்கிற்கு அதிக சம்பளத்தில் அவதாரங்களை கூட்டி வந்தால் எதுவும் கூடி விடும் என்று நம்பியதில் இன்போசிஸ் நிறுவனர்களுக்கும் தவறு இல்லாமல் இல்லை. அதே நேரத்தில் சூழ்நிலையின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவும் அவர்கள் தயார் இல்லை என்பது ஒரு குறை தான்.

அமெரிக்கா கேபிடலிச கொள்கையை அப்படியே ஒரு இந்திய நிறுவனத்தில் பகுத்துவதில் விஷால் சிக்காவின் மீதும் தவறு உள்ளது.

தற்போதைக்கு ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதற்கு கன்சல்டன்ட் நிறுவனத்தை நாடி உள்ளார்கள்.

ஆனாலும் வெறும் ஆட்களை மட்டும் அனுப்பி கமிஷன் பெற்று வந்த இன்போசிஸ் நிறுவனம் ஒரு முழுமையான டெக்னாலஜி நிறுவனமாக மாற வேண்டும். அந்த மாற்றம் அடி மட்டத்தில் ஏற்படாத வரை 20 பில்லியன் டாலர் இலக்கு  என்பது கானல் நீர் தான்.« முந்தைய கட்டுரை

முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment