Thursday, June 25, 2015

அதிக எதிர்பார்ப்புகளுடன் வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்

Advt.
நேற்று பிரதமர் மோடி மிகப்பெரிய கட்டமைப்பு திட்டங்களுள் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்ட்டை துவக்கி வைத்துள்ளார்.


இந்த திட்டம் நாடு முழுவதும் 100 நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

அதில் தமிழ்நாட்டிற்கு 12 நகரங்கள் கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. தமிழ்நாட்டின் எல்லா மாநகராட்சிகளும் இந்த திட்டத்தை பெறும் என்று தெரிகிறது.100 நகரங்களுக்கும் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் மொத்த செலவு என்பது ஒரு லட்சம் கோடி அளவு கொண்ட பெரிய திட்டம்.

ஸ்மார்ட் சிட்டி என்பது மென்பொருள், தொலை தொடர்பு, தானியங்கி போன்றவற்றின் உதவியுடன் ஒரு நகரத்தை மேம்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்வது.

உதாரணத்திற்கு சென்சர் மூலம் தெரு விளக்குகள் தானாகவே காலை மாலையில் அணைந்து எரிந்தால் அதுவும் ஸ்மார்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.

கழிவுகள் மீள் சுழற்சி செய்தல், அலுவலங்களில் எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாட்டை அதிகரித்தல், தொலை தொடர்பு உதவியுடன் போக்குவரத்து மேலாண்மை செய்தல் போன்றவையும் ஸ்மார்ட் சிட்டியில் உள்ளடங்கும்.

ஆனாலும் இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் வசதிகள் செயல்படுத்தும் அரசையும், ஒதுக்கப்படும் பணத்தையும் பொறுத்தே அமைகிறது.

அதனால் இந்த திட்டத்தில் என்னென்ன பயன்பாடுகள் வரும் என்று இனி தான் தெரிய வரும்.

இது போக, அம்ருத் என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட துணை நிலை நகரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நகரங்களின் அடிப்படை வசதிகளை பெருக்குவதும், வடிகால் வசதிகளை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கும்.

இதற்கான செலவின் 30% தொகையை மத்திய அரசு வழங்கும்.

மொத்தத்தில் இந்த இரண்டு திட்டங்களின் நோக்கம் என்பது மிக சிறந்தது. இதனால் மக்கள் தங்களது சொந்த இடத்தை விட்டு பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் பிழைப்புக்காக செல்வது பெருமளவு குறையும்.

இந்த திட்டத்தின் காரணமாக நேற்று பங்குச்சந்தையில் கட்டமைப்பு மற்றும் டெக்னாலஜி பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன. மேலும் நிறுவனங்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது.ஆனாலும் இந்த திட்டத்திற்கு அதிக அளவு தடைகள் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே பெரு நகரங்களில் இருக்கும் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு என்பது இன்னும் காணப்படவில்லை. இது போக ஒதுக்கப்படும் நிதி என்பது மிகக் குறைவான ஒன்று.

இந்த திட்டத்தில் பல உள்ளாட்சி அமைப்புகள், மாநில அமைப்புகள், மத்திய அரசு என்று மூன்றும் இணைந்து செயல்படுவது மிக அவசியம். அது தான் நம் நாட்டில் சவாலான ஒன்றும் கூட. ஆள் ஆளாக்கு ஒரு திசையில் நிற்பார்கள்.

நூறு நகரங்கள் என்று அகலக்கால் வைப்பதை விட அதில் பாதி நகரங்களில் மட்டும் செயல்படுத்திய பிறகு, அந்த அனுபவங்களை பயன்படுத்தி மற்ற நகரங்களில் விரிவாக்கம் செய்து இருந்தால் கொஞ்சம் ரிஸ்க் குறைவாக இருந்து இருக்கும்.

அதனால் இந்த திட்டம் பாதி வெற்றி பெற்றாலே ஒரு நல்ல மைல் கல்லை நம் நாடு தாண்டியது போல் ஆகி விடும்.

எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெற வாழ்த்துவோம்!

« முந்தைய கட்டுரை

முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment