Saturday, June 23, 2018

GM Diet : ஏழு நாள் எடை குறைப்பு அனுபவம்

Advt.
இது ஒரு முதலீடு சம்பந்தமான தளம்.

அதில் வாழ்வியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுவது கொஞ்சம் வித்தியாசமானதே.ஆனாலும் பணம் சம்பாதித்தல், அதில் நிலம் வாங்குதல், வங்கியில் சேமிப்பது என்பதோடு உடல் நலம் பேணிக் காப்பதும் நல்ல முதலீடு தான்.

அந்த வகையில் GM Diet என்ற எடையைக் குறைக்கும் முறை ஒன்றை அனுபவ ரீதியாக இங்கு பகிர்கிறோம்.

கடந்த ஆறு மாதங்களாக கொஞ்சம் அலுவல் வேலைப் பளு அதிகம்.

அதனால் வெளியில் கண்டதையும் சாப்பிடுதல், சரியான நேரத்தில் சாப்பிடாதது என்று பல காரணங்கள் ஒன்று கூடி எடையை ஐந்து கிலோவிற்கும் மேல் கூடி விட்டது.

BMI கணக்கு படி,

178cm உயரமுடைய எமக்கு சரியான எடை 78 கிலோவிற்குள் இருக்க வேண்டும். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்னால் எமது எடையோ 84.3 கிலோ.ஆறரை  கிலோ கூடுதல்.

எடை கூடியது மட்டுமல்லாமல் ஒரு வித சோம்பலும் கூட வந்ததை உணர முடிந்தது.

அதனால் எனன செய்யலாம் என்று நினைத்த போது இணையத்தில் காண கிடைத்தது தான் GM diet.

General Motors நிறுவனம் தங்களது பணியாளர்கள் பிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க சுகாதார துறையுடன் இணைந்து உருவாகியது தான் GM diet.

இதன்படி, உடலுக்கு தேவையான சத்துக்கள் குறையாத நிலையில், ஏழு நாளில் 3 முதல் 6 கிலோ குறையும் வரையில் உருவாக்கப்பட்டது.

கொஞ்சம் ஆச்சர்யமாகவே இருக்கும். இதில் எமது அனுபவத்தையும் பகிர்கிறோம்.

அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடாமல், நார் சத்து உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் ஏற்கனவே இருக்கும் கொழுப்பும் முடிந்த வரை சீரணம் செய்வது தான் இதன் முக்கிய நோக்கம்.

இதன் இறுதியில் உடம்பில் இருந்த கொழுப்பு ஆற்றலாக மாறி எடை குறைப்பு ஏற்படுகிறது.

இது தான் எடை குறைவிற்கு அறிவியல் ரீதியான விளக்கம்.

இனி ஒவ்வொரு நாள் என்ன செய்தோம் என்பதையும் பார்ப்போம்.

முதல் நாள்,

மன ரீதியாக கொஞ்சம் கஷ்டமான நாள். இவ்வளவு நாள் இருந்த உணவு பழக்கத்தை ஒரே நாளில் முழுமையாக மாற்றுவது என்பது எளிதல்ல.

முழுக்க பழ வகைகளையே சாப்பிட வேண்டும். வாழை, மாம்பழம் போன்ற சர்க்கரை அதிகம் நிறைந்த பழ வகைகள் தவிர்த்து மற்ற பழ வகைகளை சாப்பிடலாம்.

எப்பொழுது பசி ஏற்படுகிறதோ தேவைக்கேற்ப பழ வகைகளை சாப்பிட்டுக் கொள்ளலாம். அதனால் ஆறு வேளைகளில் சாப்பிட்டுக் கொண்டோம்.

இரண்டாவது நாள்,

முழுக்க காய்கறிகளை சாப்பிடும் நாள். காளான் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் பச்சையாகவும் சாப்பிட்டுக் கொள்ளலாம். முடியவில்லை என்றால் வேக வைத்தும் சாப்பிடலாம்.

ஆனால் எண்ணையை மட்டும் எதற்கும் பயன்படுத்தக் கூடாது.

நாம் காலிபிளவர், காரட், வெள்ளரி, பீட்ரூட், உருளை கிழங்கு போன்றவற்றை எடுத்துக் கொண்டோம்.

மூன்றாவது நாள், 

இன்று முதல் மற்றும் இரண்டாவது நாளில் சாப்பிட்ட பழ மற்றும் காய்கறி வகைகளை கலந்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

காய்கறிகளை சூப் வைத்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இன்று ஓரளவிற்கு பழக்கம் வந்து இருக்கும் என்பதால் நம்பிக்கையும் வந்து இருக்கும்.

நான்காவது நாள்,

உணவு ரீதியாக கஷ்டமான நாள் இன்றே. முழுக்க பால் மற்றும் வாழை பழத்தையே உட்கொள்ள வேண்டும்.

ஆறு வேளையாக நாட்டு பசும் பால் மற்றும் செவ்வாழை பழம் எடுத்துக் கொண்டோம்.

இன்றைய இரவு கொஞ்சம் பலவீனதாக தோன்றும். ஆனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

ஐந்தாவது நாள்,

இன்று முதல் அரிசி உணவு முறையில் இருப்பதால் தப்பித்து விட அதிக வாய்ப்பு உண்டு.

ஆனால் அரிசியில் Brown Rice தான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. ஒரு வேளை சோறுடன் வேக வைத்த சிக்கன் அல்லது மீனை சேர்த்துக் கொள்ளலாம்.

மற்ற வேளைகளில் காய்கறி, பழங்களை சாப்பிட்டுக் கொள்ளலாம். சூப்பும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆறாவது நாள், 

ஐந்தாவது நாள் போன்று இன்றும் Brown Rice, சிக்கன், மீன், காய்கறி, பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். பெரிய அளவு வித்யாசமில்லை.

அதே வேளையில் வாழை பலம், மாம்பழம் போன்றவற்றை தவிர்த்து கொள்ள வேண்டும்.

ஏழாவது நாள்,

இன்று Brown Rice உடன் காய்கறி, பழ ஜூஸ்  போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உருளைக் கிழங்கு, வாழை, மா பழங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன் டயட் முடிந்தது.

பொதுவான டிப்ஸாக,

- முடிந்த அளவு அதிகம் தண்ணீர் குடியுங்கள்.
- இடையே தேவைப்பட்டால் பால் கலக்காத கிரீன் டீயும் குடித்து கொள்ளலாம்.
- வயிறு, கால் போன்றவற்றிற்கு தேவையான எளிய உடற்பயிற்சிகளை 30 நிமிடம் செய்தல் கூடுதல் பலனைக் கொடுக்கும்
- நாம் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள மற்றவர்களும் கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்தால் தான் டயட்டில் இருப்பவருக்கு கொஞ்சம் ஆசை வருவது தவிர்க்கப்படும். அந்த வகையில் மனைவிக்கும் நன்றிக் கடன் கூற வேண்டியுள்ளது.

ஆறாவது நாள் இறுதியிலே என்னடா இப்படி கஷ்டப்பட்டு வாழ்வை அனுபவிக்க வேண்டுமா? என்ற சலிப்பு வரும்.

அது ஏழாவது நாள் இரவில் மிகவும் அதிகமாக சப்பாத்தியை கடையில் வாங்கி சாப்பிட்டு விட்டேன். தவிர்த்து இருக்கலாம்.

எட்டாவது நாள் அபார்ட்மென்ட் ஜிம்மில் இருக்கும் டிஜிட்டல் எடை இயந்திரத்தை பார்க்க ஆவலுடன் சென்றால்,

எடை 80.4 கிலோ என்று காட்டியது.

ஆக, ஏழு நாளில் 84.3 - 80.4 = 3.9 கிலோ குறைந்து இருந்தது.

தியரி படி, ஆறு கிலோ குறையா விட்டாலும், BMI எடைக்கு ஓரளவு அருகில் வந்தது மகிழ்ச்சியே.

எடை பார்ப்பதுக்கு முன்பு வரை GM Diet என்பது வெறும் மாயை தானோ என்ற எண்ணமும் கூடவே இருந்தது. அதனால் இந்த எடை குறைவு கூடுதல் மகிழ்வை தந்தது.

இறுதியாக,

இது முழுக்க எமது அனுபவத்தில் எழுதப்பட்ட கட்டுரை. அதனால் இதய, சர்க்கரை, ரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்த பின் தொடர்வது நல்லது.

அதே போல் ஏழு நாளுக்கு பின்னால் தொடர்ந்து இந்த டயட்டை தொடர்ந்தால் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையவோ, மற்ற சத்துக்கள் குறையவோ வாய்ப்பு உள்ளது. அதனால் கவனமாக இருக்கவும்.

ஏழு நாளில் எடை குறைந்தாலும், அதன் பின் தொடர்ச்சியாக நீடிக்க வேண்டும் என்றால் தொடர்ந்து சிறிய உடற்பயிற்சிகளுடன் உணவு கட்டுப்பாட்டோடு இருத்தலும் அவசியம்.

சம்பாதிக்கும் பணத்தை முறையான முதலீடுகளில் மாற்றி, அதனை முழு உடல் நலத்துடன் அனுபவிக்க எமது வாழ்த்துக்கள்!


« முந்தைய கட்டுரை

முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment