Friday, September 9, 2016

உச்ச நிலை சந்தையிலும் தவிர்க்க வேண்டிய இரு துறைகள்

தற்போது சந்தை 29,000 சென்செக்ஸ் நிலையைத் தொட்டுள்ளது. இந்த நிலையில் 2013ம் வருடத்தில் நாம் பரிந்துரைத்த எட்டு பங்குகள் கொண்ட போர்ட்போலியோ 250%க்கும் மேல் அதிகரித்து இருக்கும் என்று தோன்றுகிறது. கூடிய விரைவில் அதன் நிலையை பகிர்கிறோம்.


இப்படி ஜிஎஸ்டி, பரவாயில்லை என்ற ரகத்தில் நிதி முடிவுகள், தொழில் துறை உற்பத்தி தரவுகள் என்று பல நிலைகள் நமக்கு சாதகமாக அமைந்ததால் சந்தை காளையின் பிடியில் உள்ளது என்று சொல்லலாம்.ஆனாலும் இந்த உச்ச நிலையில் கூட இரு தொழில் துறைகளின் பங்குகளை கண்டால் முதலீட்டாளர்கள் ஓடுவது என்பது விந்தையானது என்றே சொல்லலாம். 

அதில் ஒன்று நாம் முன்னர் சொன்னவாறே மென்பொருள் துறை.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் லட்சங்களில் முதலீடு செய்தவரை கோடீஸ்வரனாக மாற்றிய துறை என்று சொல்லலாம்.

ஆனால் தற்போது காலத்திற்கு ஏற்ற போட்டியை சமாளிக்கும் அளவு இந்திய நிறுவனங்கள் தயார் செய்யாமல் இருந்ததன் விபரீதத்தை தற்போது உணர முடிகிறது. முப்பது சதவீத வரை லாப மார்ஜின் பெற்ற நிறுவனங்கள் தற்போது பதினைந்து சதவீத மார்ஜினுக்கு தள்ளாடிக் கொண்டி இருக்கின்றன.

இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு அறுபது சதவீத வருமானம் என்பது நிதி துறை சார்ந்த BFSI என்ற செக்மென்ட் மூலமாகவே கிடைத்து வந்தது. அதிலும் அமெரிக்க நிறுவனங்கள் ஆப்பு வைத்து விட்டன.

நிதி, வாங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதிய மென்பொருள் உருவாக்குவதற்கான செலவுகளை குறைப்பதாக அறிவித்தததில் TCS, இன்போசிஸ் பங்குகள் ஆடிப் போய் விட்டன என்றே சொல்லலாம். இதில் ஏற்கனவே இன்போசிஸ் RBS வங்கியின் இரண்டாயிரம் கோடி ரூபாய் ப்ரொஜெக்ட்டை அண்மையில் தான் இழந்து இருந்தது.

இப்படி போட்டி, செலவீன குறைப்புகள் போன்றவற்றின் காரணமாக செலவீன குறைப்புகளில் தான் லாபத்தை காட்டுவதற்கு ஐடி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று கூட சொல்லலாம்.

அதனால் மென்பொருள் துறையை தங்கள் போர்ட்போலியோவில் வளர்ச்சி என்ற அடிப்படடையில்  வைத்து இருப்பது அவசியமில்லாதது என்றே தெரிகிறது.

அடுத்து, இன்னொரு துறை சொல்வதென்றால் டெலிகாம் துறை...ஒரு சர்க்கிளில் நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதால் ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் தாங்கள் வைத்த கட்டணத்தை இஷ்டம் போல் வாடிக்கையாளரிடம் வசூலித்து வந்தன.

ஆனால் ரிலையன்ஸ் ஒரே நாளில் ஜியோவை கொண்டு வந்து இந்த நிறுவனங்களை பதம் குலைய வைத்து விட்டது. யாருமே எதிர்பார்க்காத அளவில் பேச கட்டணம் தேவையில்லை, ஐம்பது ரூபாய்க்கு ஒரு GB டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளதை சமாளிக்க இந்த நிமிடம் வரை மற்ற நிறுவனங்கள் எந்த ஒரு உருப்படியான மாற்று திட்டமும் தரவில்லை.

இப்பொழுது தான் டெலிகாம் துறையில் முதல் முறையாக போட்டி பொருளாதார நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த அடியில் இருந்து இந்த நிறுவனங்கள் மீள வேண்டும் என்றால் ஜியோதான் ஏதாவது  வழியில் தோற்க வேண்டும். அப்படி தோற்க விடுவதற்கு பணத்தை கொட்டி வைத்துள்ள அம்பானி எளிதில் விடும் ஆள் இல்லை.

அதே நேரத்தில் மற்ற நிறுவனங்களை சார்ந்து தான் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் வாழ வேண்டும் என்பது ஒரு முதலீட்டாளனாக நமக்கும் அவசியம் இல்லை.

அதனால் டெலிகாம் நிறுவனங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தையும் சேர்த்து தான் நாம் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டிய தருணம் இது.

அவர்கள் அடித்துக் கொள்ளட்டும். ஆனால் நாம் பலியாடாக வேண்டாம்.


AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment