Sunday, August 2, 2015

வளர்ச்சிக்காக செலவுகளை கூட்டிய மத்திய அரசு, மகிழ்ச்சியில் வங்கிகள்

பொதுவாக பொருளாதார மந்தம் ஏற்படும் போது ஒரு துறையை மட்டும் பாதிக்காமல் வலை போல் எல்லா இடங்களுக்கும் பரவி விடும்.


அதன் பிறகு யார் அந்த சிக்கலில் இருந்து விடுவிப்பது என்பதில் பெருங்குழப்பம் ஏற்படும்.

அந்த சூழ்நிலை தான் இந்தியாவில் ஏற்பட்டு இருந்தது.2008ல் நடந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு இந்திய பொருளாதரத்தில் பெரிதளவு மாற்றம் இல்லாமல் தான் சென்று கொண்டிருந்தது.

தொடர்ச்சிக்கு உலக காரணிகள் மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாது.

அதன் பிறகு தொடர்ந்த அரசின் பல மட்டங்களில் நடைபெற்ற ஊழல்கள், அதனால் கோர்ட்டே பல திட்டங்களுக்கு தடை போட்டது என்ற காரணங்களால் பொருளாதாரம் அப்படியே முடங்கி போனது.

இதனால் நிலக்கரி, மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கபப்ட்டு இருந்தன.

இந்த நிறுவனங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வங்கிகளிடம் மிக அதிக அளவில் கடன் பெற்று இருந்தன.

எப்படி என்றால், நிறுவன மதிப்பை விட அதிகமாக மடங்குகளில் கடன் வாங்கி இருந்தன.

நிறுவனங்களுக்கோ ப்ராஜெக்ட்கள் முடங்கி போனதால் கடன்களை வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. அதனால் வங்கிகளுக்கு வாராக் கடன்கள் கணிசமாக உயர்ந்தது.

உதாரணத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாராக்கடன் 18% என்ற அளவில் கூடியது. அதாவது 100 ரூபாய் கடன் கொடுத்தால் அதில் 18 ரூபாய் திருப்பி வந்து சேராது.

பொதுவாக ஒரு வங்கி வாராக்கடன்களை நான்கு சதவீதத்திற்குள் வைத்து இருப்பதே நல்ல நிலையாக கருதப்படும்.

ஆனால் பொதுத்துறை வங்கிகளில் நிலைமை கட்டுக்கு மீறி சென்றது. இதனால் தொடர்ந்து ஐஓபி போன்ற பல வங்கிகள் லாபம் காட்ட முடியாமல் போனது.

ஆர்பிஐ வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் பிசினஸ் நடந்தால் தான் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியும்.

அதே நேரத்தில் இரு வருடங்கள் முன் வரை அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாக கூடி இருந்தது.  அதனால் அவர்களால் செலவும் செய்ய முடியாது. அதே நேரத்தில் திட்டமிட்ட ப்ராஜெக்ட்கள் தடையில் இருந்தன.

இப்படி விடப்பட்ட புதிரை யார் விடுவிப்பது என்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டு இருந்தது.

கடந்த வருடத்தில் மோடி அரசால் நிர்வாக நிலையில் ஏற்பட்டு இருந்த மாற்றங்கள் தடை செய்யப்பட திட்டங்களை மீண்டும் செயல்பட வைத்தது. இது ஒரு நல்ல மாற்றம்.

ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அவர்கள் எந்த செலவுமே செய்ய முடியவில்லை. இதனை கடந்த வருடத்தில் அருண் ஜெட்லி தாக்கல் செய்து இருந்த பட்ஜெட்டிலே அறிந்து இருக்கலாம்.

ஆனால் மோடிக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக விழுந்து கொண்டே இருந்தன. எண்ணெய் விலை குறைந்தது. தங்க விலை குறைந்தது. சீனாவால் ஸ்டீல், நிலக்கரி விலை குறைந்தது.

இப்படி கமாடிட்டி பொருட்கள் அனைத்தும் கணிசமாக வீழ்ச்சி அடைந்தன.  ஆனால் இவைகள் தான் நமக்கு பட்ஜெட்டில் நமக்கு துண்டு போட வைக்கும் காரணிகள். இதனால் கஜானாவில் கணிசமாக பணம் மிச்சமானது.

இதனை ஜெட்லி அழகாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த வருடம் தொடக்கம் முதலே பல லட்சம் கோடிகளுக்கு கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  நிலக்கரி, டெலிகாம் ஏலங்கள் முறையாக நடத்தப்பட்டு இருந்தன. பல மின்சார திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதனால் நிறுவனங்களின் ஆர்டர் புக் நிறைந்து இருந்தது.

ஆனால் ஆர்டர்களை செயல்படுத்துவதற்கு காசு வேண்டுமே. அது நிறுவனங்களிடம் இல்லை. மீண்டும் வங்கிகளிடம் சென்றன. ஆனால் வங்கிகளோ வாராக் கடன்களால் கடன் கொடுக்க முடியாத அளவுக்கு சென்று இருந்தன. இதனால் இவர்கள் சென்றாலே துரத்தி விடும் நிலை தான்.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளுக்கு எழுபதாயிரம் கோடி அளவு காபிடல் நிதி உதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிதி மீண்டும் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க பயன்படுத்தப்படும்.

இந்த நிதி உண்மையிலே ஒரு நல்ல முட்டுக்கட்டையை நீக்கி உள்ளது.

நாம் இது வரை நிலக்கரி, மின்சாரம், இன்ஜினியரிங், கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்து கடுமையான நஷ்டம் அடைந்து இருக்கலாம். அலல்து பங்கு விலை கூடாமாலே பல ஆண்டுகள் இருந்து இருக்கலாம்.

அந்த சூழ்நிலை இனி மாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பே இது.கடந்த வாரம் நண்பர்களுக்கு போர்ட்போலியோ தயார் செய்யும் போது ஒரு முக்கியமான தகவலை திரட்ட முடிந்தது.

பல நிறுவனங்கள் முக்கியம் அல்லாத பிரிவுகள் அல்லது சொத்துக்களை விற்று கடனை அடைக்க முற்பட்டுள்ளன. இதனால் வட்டி கணிசமாக குறைந்து லாபம் கூடும்.

இந்த நிறுவனங்கள் நஷ்டத்தால் சொத்துக்களை விற்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். வேறு கோணத்தில் அடுத்த வருடங்களில் வரும் ப்ராஜெக்ட்களுக்காக தம்மை தயார் செய்யும் நடவடிக்கையாக பார்க்கலாம்.

வங்கிகளை பொறுத்த வரை மீண்டும் கடன் கொடுத்து பழைய கடன்களை வசூலிக்கும் முறை தான். ஆனால் நிறுவனங்கள், வங்கிகள், நாட்டின் பொருளாதாரம் என்று பல முனைகளில் நேர்மறை திருப்பத்தை ஏற்படுத்த உதவும்.

மொத்தத்தில், மோடி மேஜிக் மேன் அல்ல. ஆனால் அதிர்ஷ்டசாலி தான்..


AROUND THE WEB


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment