Thursday, July 16, 2015

இந்தியாவில் எந்த கண்டுபிடிப்பும் இல்லை - யார் காரணம்?

நேற்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த 60 ஆண்டுகளாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார்.


அதற்கு நமது இளைஞர்களிடையே அறிவாற்றலும், திறனும் குறைந்ததே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.கடந்த 60 ஆண்டுகளாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்ற அவரது முதல் வாதத்தை ஏற்க வேண்டிய நிலையில் தான் உள்ளோம்.

அதற்கு இளைஞன்  மட்டும் தான்  காரணம் என்ற இரண்டாவது காரணத்தை முழுவதுமாக ஏற்க இயலாது.

நமது சமூகம், அரசு, கார்பரேட் நிறுவனங்கள் என்று பலரும் இணைந்து தான் இந்த சூழ்நிலைக்கு தள்ளி உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.

பொதுவாக நமது தற்போதைய கல்வி முறை என்பது அறிவை வளர்ப்பதற்கு தான் பயன்படுகிறதா என்றால் இல்லை என்று 90% சொல்ல முடியும்.

கல்வி கற்கும் போது அதனை வியாபாரமாக பயன்படுத்தி சிலர் சம்பாதிக்கின்றனர்.

கற்ற பிறகு கற்றவர்கள் அந்த கல்வியை வியாபாரமாக பயன்படுத்தி காசு சம்பாதிக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலை தான் ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பில் படிக்கத் தொடங்கும் போதே ஊக்குவிக்கப்படுகிறது.

அதிலும் நேரு காலத்தில் இஸ்ரோ, DRDO போன்ற மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டது. அதனால் இன்று மங்கள்யானை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறோம்.

அப்பொழுது இந்தியா மிக கடினமான ஒரு வறுமை காலக்கட்டத்தில் இருந்தது. அந்த சூழ்நிலையிலும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆனால் அடுத்து வந்த அரசுகள் அந்த ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு விரிவாக்கம் செய்யத் தவறி விட்டன.

இன்று கூட மோடி அரசு Made In India என்ற பெயரில் நமது திறமைகள் வியாபரத்திற்காக தான் ஊக்குவிக்கப்படுகின்றன. தவிர ஆராய்ச்சிக்கு என்று பெரிதளவு நிதி ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஆராய்ச்சி கருத்தரங்கு நடக்கும் போது நாங்கள் இராமாயண காலத்திலே விமானம் கண்டறிந்து விட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்யும் பழம்பெருமை அரசும் சமுதாயமே இங்கு உள்ளது.

அரசியல் கலக்காத ஆராய்ச்சி தான் எப்பொழுதும் வெற்றி பெறும். ஆனால் அதனைக் கலக்காமல் இங்கு ஆராய்ச்சி செய்ய முடியுமா?

புதுவையில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியாக சேர வேண்டும் என்றால் இருபது முதல் முப்பது லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் ஆகும். அவன் ஆராய்ச்சி செய்வானா? அல்லது கொடுத்த பணத்தை சம்பாதிக்க விரும்புவானா?

கல்லூரியில் படிப்பு முடித்து வங்கி கடனுடன் வரும் ஒரு இளைஞன் கடனை அடைக்க முதலில் முனைவானா? அல்லது ஆராய்ச்சிக்காக காத்திருப்பானா? என்பதில் பல யதார்த்த கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

சரி. அவன் தான் ஆரம்பக் கட்டத்தில் பொருளாதார கஷ்டத்தில் வருகிறான் என்றால் அந்த பிரச்சினைகளை தீர்த்த பிறகு நமது கார்பரேட் நிறுவனங்கள் எந்த அளவு ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன?

ஏன்? நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமே ஒரு தரம் வாய்ந்த டெக்னாலஜி தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனமாக மாறுவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தன.

அவர்களிடம் மிதமாக இருக்கும் 25,000 கோடி பணத்தை R&D என்ற ஆராய்ச்சி பிரிவிற்கு எவ்வளவு செலவழித்து உள்ளார்கள்?

இதில் இன்போசிஸை மட்டும் குறை சொல்ல முடியாது. TCS, விப்ரோ போன்றவையும் சேர்ந்து தான் உள்ளடங்கும். இந்த நிறுவனங்கள் நமது அறிவை விற்கும் ஒரு ஏஜெண்ட்ட்டாகத் தான் இன்றும் செயல்படுகின்றன.வேதியியல் அறிஞர் ராவ் சொன்னது போல் இந்திய ஐடி துறையும் ஆராய்ச்சியின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

அந்த காலத்தில் அறிவியலை விட ஆன்மீகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அப்பொழுது கூட சி.வி.ராமன், சந்திரசேகர், ராமனுஜம் என்று அறிஞர்கள் கிடைத்தார்கள்.

ஆனால் தற்போது அறிவியலை விட வணிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். இதன் விளைவு தான் கண்டுபிடிப்புகள் தொய்வில் சென்று கொண்டிருக்கின்றன.

வரும் காலங்களில் பொருளாதார சூழ்நிலை முன்னேறும் போது இளைஞன் சுயமாகவே முடிவெடுக்கும் நிலைக்கு வருவான். அப்பொழுது இந்த நிலை மாறலாம்.

ஆனால் அந்த சூழ்நிலையிலும் அரசுகள் உதாசீனப்படுத்தி வெளிநாட்டிற்கு தள்ளாமல் இருக்க வேண்டும்.

மூர்த்தியின் பேச்சும் நல்லது தான். ஒரு நல்ல விவாதத்தை துவக்கி வைப்பதற்கு இந்த பேச்சு உதவும்.


முதலீடைத் தொடர...

Email: muthaleedu@gmail.com

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற

முதலீடு கட்டண சேவை
பங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை
STOCKCALCULATION.COM
Stock Valuation, PE, PB, Debt, Dividend Calculators in convenient way

No comments:

Post a Comment